வேளாண்மை

உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.

வீட்டு விலங்குகளினதும் தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழி வகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்பு கொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களைச் சாகுபடி செய்தல், கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசு நிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.

மனித சமூகங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்து வந்துள்ளன. வரலாற்றில், வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், பண்பாடுகள், தொழில் நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளது. எனினும், விலங்குகளையும் தாவரங்களையும் பழக்கப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிலத்தைப் பண்படுத்துவதற்காக, பல நிலையிலான தொழில் நுட்பங்களையே வேளாண்மை நம்பி இருந்துள்ளது. தாவரங்களைப் பயிர் செய்ய நீர்ப்பாசனம் தேவை. தரிசுப் பயிர்முறையும் உள்ளது. விலங்குகளை வளர்க்க புல்வெளிகள் தேவை. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில் நுட்ப வேளாண்மை முறை மேலோங்கியதால் "ஓரினச் சாகுபடி" (monoculture) பரவலாகியுள்ளது.

எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக "நிலைகொள் வேளாண்மை" (permaculture) மற்றும் "உயிரி வேளாண்மை" (organic agriculture) என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. வேளாண்மையைப் பற்றிய ஆய்வை வேளாண் அறிவியல் என்கிறோம். வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு தோட்டக்கலை எனப்படுகிறது.

பெயர் வரலாறு

வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியவற்றைக் குறிக்கும். நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர். வேளாண்மை என்ற சொல் "விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்" என்ற பொருளும் கொண்டதாகும். வேளாண்மையைக் குறிக்கின்ற agriculture என்னும் ஆங்கிலச் சொல் agricultūra என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. ager என்பது "நிலம்" என்றும், "cultura" என்பது "பண்படுத்தல்" என்றும் பொருள்தரும். எனவே, "நிலத்தைப் பண்படுத்தும்" செயல்பாடு "agricultūra" ("agriculture") என்று அழைக்கப்படலாயிற்று. மேலும், "cultura" என்னும் சொல்லே "பண்பாடு" என்னும் செம்மைப் பொருளை ஏற்றது. அதைத் தொடர்ந்து, "cult" என்னும் சொல் "வழிபாடு" என்னும் பொருளிலும், உள்ளத்தைப் பண்படுத்தல் "கல்வி" என்னும் பொருளிலும் வழங்கலாயிற்று. தமிழில் "கல்வி" என்பது "அகழ்தல்" என்னும் பொருள் தருவதையும் இவண் கருதலாம். இவ்வாறு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண்மைத் தொழில் மனித இனத்தின் உயர்நிலைச் செயல்பாடுகளை உணர்த்துகின்ற காரணி ஆயிற்று.

வரலாறு

3000ஆண்டுகளுக்கு முன் சுமேரியர்கள் பயன்படுத்திய அரிவாள் விவசாய வரலாறு மனித வரலாற்றில், உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. விவசாய முன்னேற்றம் மனித நாகரிகத்தில் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது எனலாம். வேளாண்மையே மற்ற எல்லா கலைகளுக்கும், முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது, அந்த சமூகத்திலுள்ள மற்றவர்கள் உணவு உற்பத்தி தவிர்த்த மற்ற பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முடிந்தது. வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் விவசாயத்தின் வளர்ச்சியே மனித நாகரீகத்தை சாத்தியமாக்கியுள்ளது என்று நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளனர்.

வேளாண் தொழில் சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையானது. இது பல்வேறு காலகட்டங்களில் நிலப்பரப்பிலும் மகசூலிலும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனம், பயிர் சுழற்சி, உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன, ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெரும் மாறுதலை நிகழ்த்தின.

வேளாண்மை சார்ந்த செயல் முறைகள்

மக்கள் தொகை அதிகரிப்பின் விளைவாக உணவுத் தேவை அதிகரித்துள்ளது. விளைநிலங்களின் பரப்பளவோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் தொழிற்நுட்பத்தோடு கூடிய புதியவகை அனுகுமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. விதைப்பதில் தொடங்கி அறுவடை வரை உள்ள அனைத்து வகையான செயல்முறைகளும் வேளாண்மை சார்ந்த செயல்முறைகள் என அழைக்கப்படுகின்றன. பயிர்சாகுபடி என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும்

➛நிலத்தைத் தயார்செய்தல் மற்றும் விதைதல்

➛இயற்கை மற்றும் செயற்கை உரமிடல்

➛பலவகையான பாசனமுறைகள்

➛களையெடுத்தல்(களைச் செடிகளில் இருந்து பயிர்களைப் பாதுகாத்தல்

➛சேமித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்
ஆகியன.

இந்தியாவில் வேளாண்மையின் இன்றைய நிலை

முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட முதலீடு 15 சதம். 2002-2007ல் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்தது வெறும் 1.3 சதம்.மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் பெற்றமை ஆகியவையும் வேளாண்மைக்கான ஒரு சிக்கலாக உள்ளது. முற்காலத்தில் ஆட்சியின் பெரும் வருவாயக நிலவரி இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் சமூகத்தில் மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருவாய் வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது.

விவசாய விளை நிலங்கள்

இந்தியாவில் இன்றைய தலையாயப் பிரச்சனைகளில் ஒன்று விவசாய விளை நிலங்களின் ஆக்கிரமிப்பு. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ந்ததால் , இன்று வழி வழியாக விவசாயத் தொழிலையே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்த பல குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வேளியே வரத் துணிந்ததோடு அவ் விளை நிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உரு மாறிக் கொண்டிருக்கின்றன. மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றின்படி, 2007-08 இருந்து 2010-11 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பு 7,90,000 ஹெக்டேர் குறைந்திருக்கிறது. 2007ஆம் ஆண்டில் தேசிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி மத்திய வேளாண் அமைச்சகம் குறைந்து வரும் வேளாண் நிலப்பரப்பைத் தடுப்பதற்குப் பல வழிமுறைகளை சுட்டிக்காட்டியது.

➛ முடிந்தவரை விளைநிலங்கள் வேறு உபயோகங்களுக்காக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்;

➛ குறிப்பாக, பலதரப்பட்ட சாகுபடிகளையும் மேற்கொள்ளத்தக்க விதத்தில் பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களின் பயன்பாடு மாற்றப்படக்கூடாது;

➛ பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களை அரசேகூடத் தனது சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் .

விவசாயம் என்பது மாநிலங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உரிமை என்பதால், மத்திய அமைச்சு வழிகாட்டத்தான் முடியுமே தவிர, மாநிலங்கள்தான் அதை செயல்படுத்தியாக வேண்டும்.

விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையில் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1993, 94ல் 25 சதவீதமாக இருந்த வேளாண்மை உற்பத்தி 2005, 2006ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல் 2001, 02ல் 76.89 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2004, 05ல் 61.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.தமிழகத்தில் , நெல் சாகுபடிக்கான விவசாய பரப்பளவு, 20,60,000 (2001-02) ஹெக்டேரிலிருந்து, 19,04,000 (2011-12) ஹெக்டேராகக் குறைந்து விட்டிருக்கிறது. தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி சோளம் சாகுபடிப் பரப்பளவு 3,17,000 ஹெக்டேரிலிருந்து 1,98,000 ஹெக்டேராகவும், கம்பு 1,25,000 ஹெக்டேரிலிருந்து வெறும் 47,000 ஹெக்டேராகவும், கேழ்வரகு 1,25,000 ஹெக்டேரிலிருந்து 63,000 ஹெக்டேராகவும் 2001-02லிருந்து 2011-12 வரையிலான பத்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. இது தவிர, சிறு தானியங்கள் பயிரிடப்படும் மொத்த சாகுபடிப் பரப்பு, மேலே குறிப்பிட்ட பத்து ஆண்டுகளில் 27,66,000 ஹெக்டேரிலிருந்து 25,42,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.